பட்டாம் பூச்சியாய் கல்லூரியில் நுழைந்து இறுதி ஆண்டுக் கல்விப்பயணம் ஆரம்பித்திருந்த வேளை. கல்லூரி நான்காம் ஆண்டு. உல்லாசச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர் வகுப்பு மாணவர்கள். 4 நாட்கள் சுற்றுலா.
முதல் நாள் இரவு ஆட்டம் பாட்டத்துடன் கிளம்பியது. பேருந்தினுள்ளும் தொடர் வண்டியை ஓட்டி வந்தனர் என் வகுப்பு மாணவர்கள். எல்லா புதுப் பாடல்களுக்கும் புது நடனத்தை
காலையில் விடிந்ததும் நாங்கள் சென்று சேர்ந்த இடம் மைசூர். ஊர் சுற்றி முதல் நாள் இரவு அசதியின் உச்சத்தில் மீண்டும் எங்களின் தங்கிடம் தேடி வந்தோம்.
அடுத்த நாள் ஆசிரியர் தினம். ஆகவே.. எங்களோடு வந்த ஆசிரியர்களுக்காக விசேசமாக கேக் வாங்கி அவர்களை வெட்டச் செய்து மகிழ்ச்சியாய் கொண்டாடினோம்
அந்த மகிழ்வுடனே இரு தினங்களையும் மைசூரில் கழித்து அடுத்த இடத்தை நோக்கி பயணப்பட்டிருந்தோம். அடுத்து நாங்கள் சென்றது பெங்களூர். அன்று கிருஷ்ணர் ஜெயந்தி ஆகவே முதலில் நாங்கள் சென்றது "இஸ்கான் டெம்பில்". பல வளைவுகளைக் கொண்டு மிக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்தோம் தரிசனத்திற்காய். கூட்ட நெரிசல் வேறு. எங்கள் வகுப்பு மாணவர்கள் என்னோடு வந்த தோழிகள் அனைவருக்கும் எங்கள் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பாய் இறுதி வரை கூட்டிச் சென்றதை இன்று வரை என்னால் மறக்கவே முடியாது.
கூட்டத்தில் பல இடர்களை கடந்து கண்ணியமாய் எங்களை பாதுக்காத்து காப்பாற்றிய நல்லுள்ளம் படைத்த மாணவர்களை நிச்சயம் நான் இங்கு நினைவு கூற கடமைபட்டிருக்கிறேன்.
என் குடும்பம் அப்போது மிகுந்த கஸ்டமான சூழலில் இருந்தது. சுற்றுலா செலவும் அங்கு உணவருந்தவுமே என் பெற்றோர் கொடுத்த பணம் சரியாக இருந்தது. என் உயிர் தோழி என்னோடு எல்லா சமயத்திலும் கூடவே இருந்தாள். என் பணம் முழுக்க என் சாப்பாட்டிற்கும் அங்கு பூங்கா அனுமதிச் சீட்டு வாங்கவும், புகைப்படம் எடுக்க வசூலிக்கும் கட்டணத்திற்குமே சரியாய் போனது. இதற்கிடையில் மெஜஸ்டிக் என்ற இடத்தில் சில பொருட்களை வாங்க தோழிகளோடு சென்றேன்.
என் அருமை தோழியுடன் நானும். ஒரு துணிக்கடைக்குச் சென்றோம்.அங்கு அழகழகாய் சுடிதார்கள் நியாயமான விலையில். எந்த பெண்ணுக்கும் ஆடைகள் மேல் பிரியம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. எனக்கும் சின்ன மனத்தில் குட்டி ஆசை.
ஒரு துணியேனும் அங்கு சென்று எடுத்துவிடுவது என்று. ஆனால் என் எதிர்பார்ப்புக்களை முறியடித்தது என் கைவசம் இருந்த நிதி நிலமை.
ஒரு துணியை ஆசையாய் எடுத்து பார்த்தவண்ணம் இருந்தேன். என் தோழியும் வேறு அவளுக்காய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
என் பட்ஜெட்டில் எனக்கு பிடித்த கலரில் துணியை செலக்ட் செய்தேன். ஆனால்... எடுக்க பணம் இல்லை. அவள் என்ன நினைத்தாலோ அவள் செலக்ட் செய்ததை வேண்டாம் என்று சொல்லி என் துணிக்கு பணம் தந்தாள். அன்புடன் என் கை பற்றி, "வைத்துக் கொள் மிகவும் ஆசை பட்டாய் என்று எனக்கு தெரியும். மெதுவாக உன்னால் முடிந்த போது பணம் கொடு" என்று சொன்ன நிமிடத்தையும் அந்த நாளையும் என்னால் என் வாழ்வில் மறக்கவே முடியாது.
என் கண்கள் பனித்ததை அவள் பார்த்திருக்கக் கூடுமோ என்னமோ... அவள் சிரித்தாள் ஆறுதலாய் என் கை பற்றி. நான் வார்த்தை வர இயலாமல் ஒரு கணம் தடுமாறி பின் என் மனமாற நன்றி சொன்னேன் அவளிடம்.

ஆனால், வாழ்க்கையில் நான் அன்றிருந்த சமயம், எனது ஆசையை நிறைவேற்ற அவள் எடுத்த அந்த சிரத்தை என்னால் இன்னும் மறக்கவே முடியவில்லை. நான் மறந்தால் அது என் நட்பிற்கு நான் செய்யும் துரோகம். பின்னர் அதற்கான பணம் அவள் வாங்க மறுத்தும் கொடுத்து விட்டேன் என்றாலும்.. அவளின் அந்த உணர்வை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்த நாள் தான் நான்காம் நாள். இறுதியாக பெங்களூரின் அழகை ரசித்து விட்டு சரியாக ஒரு மணி அளவில் கோவை நோக்கி பயணமானோம்.
சுமார் 2 மணி அளவில் ஓசூர் நோக்கி பேருந்து போய்க் கொண்டிருந்தது. பேருந்தில் பாதிப்பேர் தூங்கியவண்ணம் இருந்தனர். தொலைக்காட்சியில் குஷி படம் குஷியாய் ஓடிக் கொண்டிருந்தது. ஜோதிகா கோவத்தில் சிவந்தவண்ணம் இருந்தார்.
அப்போது தான் அந்த அடுத்த மறக்க முடியாச் சம்பவம் நடந்தது.
நடந்தது இது தான், சாலையின் ஓரம் நின்றிருந்த ஒரு லாரி மெதுவாக புறப்பட எத்தனிக்க,அதன் பின்புறம் இரு பெண்கள் இருசக்கர வாகனத்தில் அந்த லாரியை ஓவர் டேக் செய்ய முயல,எங்கள் பேருந்து லாரியிலும் மோதாமல், பக்கச் சுவரிலும் மோதாமல் நிறுத்த முயலும் போது அந்த இரு சக்கரவாகனத்தின் மீது லேசாக மோதியது.
என் வகுப்பு பசங்கள் உடன் இறங்கி உடனே அவர்களைத் தூக்க, பேருந்தில் என் வகுப்பு மாணவி.. "வீல்..!!" என்று சத்தமிட்டாள். கூட்டம் கூடியது.
அந்த பெண்ணிற்க்கு தலையில் அடிப்பட்டிருந்தது,கூடியிருந்த கூட்டம் எங்களை முறைக்க ஆரம்பித்தது தமிழ்நாட்டிற்க்கும்,கர்நாடகாவுக்கும் பிரச்சினை இருந்த நேரமது,ஓட்டுனரை பாதி பேர் ஏகவசனத்தில் திட்ட ஆரம்பித்திருந்தனர்.
காவல் துறை வந்தது,ஓட்டுனர் எதோதோ கெஞ்சி பார்த்தார்,பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றார்கள். எங்களுடன் வந்திருந்த ஆசிரியர்களுக்கும் என்ன செய்வதென்றேதெரிய வில்லை. இவ்வளவு களேபரமும் நடந்துக் கொண்டிருக்க இருட்ட ஆரம்பித்து விட்டது..
விபத்தில் காயமுற்ற அந்த பெண்மணியின் கணவரை தொடர்பு கொண்டு கெஞ்சியதில் அவர் இரவு தான் காவல் நிலையத்திற்கு வரவேன் என்று சொல்லி விட்டார். ஓட்டுனர் அந்த டிராவல்ஸ் கம்பெனியின் உரிமையாளை தொடர்பு கொண்டு பேசுவதும் காவல் நிலைத்திற்குள் போவதுமாக இருந்தார்.
என்னோடு சேர்த்து அனைத்து மாணவிகளும் பேருந்திலேயே அமர்ந்து காவல் நிலையத்தின் முன் சிறைபட்டிருந்தோம். மகிழ்ச்சியாய் முடிய வேண்டிய பயணம்... இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை எல்லார் மனத்திலும். மதியம் 2 மணிக்கு நடந்த சம்பவம் இரவு 8 மணி ஆகியும் முடியவில்லை. அங்கேயே நாங்கள் அனைவரும்.
இருட்ட ஆரம்பிக்க, எங்களின் பாதுகாப்பு கருதி, என் வகுப்பு மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டில் மாணவிகள் அனைவரையும் அழைத்துச் சென்று தங்க வைத்தனர். எங்களின் துணிப்பைகள் எல்லாம் பேருந்திலேயே இருந்தன. கவலை தோய்ந்த முகத்தோடு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிய வண்ணம் காத்துக் கிடந்தோம்.
அங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் கையில் காசும் இல்லாமல் திரும்பிப் போகும் வழி தெரியாமல் விழித்தவண்ணம் கிடந்தோம்.
இரவு முழுக்க தூங்காமல் இருந்தோம்.
இதற்கிடையில் ஓட்டுனர் பதற்றமாய் இருந்தததால் பேருந்து இரு முறை சாலையின் ஓரத்திற்கு சென்றது. என் மாணவர்கள் தூங்காமல் விழித்திருந்து அவரிடன் பேசிய வண்ணமே நல்ல படியாய் எங்களை சுமார் காலை 11 மணி அளவில் கோவைக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்த சம்பவங்கள் உண்டான அந்த நாட்களை என்னால் என்றும் மறக்கவே முடியாது.
-பூமகள்.
0 comments:
Post a Comment